Monday, May 4, 2009

தம்பி, உனக்கிது சமர்ப்பணம்...

மண்ணுலகம் பார்த்த பணி
முடிந்ததென்று
மருத்துவம் பார்க்க
விண்ணுலகம் சென்றாயோ ?
இது முறையோ?
***********************
உன் மருத்துவ பரிந்துரை
புத்தகங்கள்
உன் புகழஞ்சலி பாட
தன்னை தாரைவார்த்து விட்டது.
*****************************
"தகுதி உள்ளவை பிழைக்கும்"
என்ற டார்வின் விதியும்
தோற்று போனதோ உன்னிடம்?
தகுதிகளை குவியல் குவியலாய்
தன்னகத்தே கொண்ட சிகரமே,
மருத்துவம் பார்க்க வந்த நீ
மண்பட்டு போனது முறையோ?
**********************************
உன் கல்லறையில் முளைக்கும்
செடிகளுக்கு நிச்சயமாக
மருத்துவ குணம் இருக்கும்.
************************************
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
என்ற முதுமொழியின் அர்த்தத்தை
அதன் ஆழத்தை, வலியை
இன்று உணர்கிறேன் தம்பி
உன் பிரிவால்.
*********************************************
வாழ வந்தவனே,
வளமாக செழித்து வளர்ந்தவனே
உனக்கு வேராக இல்லையெனினும்,
நீராக இருந்தேனே.
நிழல் தருவாய் என நினைத்தோமே,
இன்று, நிலம் மூட நீ சென்றது
முறைதானா?
திரும்பி வருவாயா தம்பி
அழுது அழுது
என் கண்களே கரைந்து
விடும் போலிருக்கிறது...
************************************
நிரு,
உன்னை எத்தனை முறை
அழைத்திருப்பேன் இந்த 26 வருடத்தில்
உன் கல்லூரி நாட்களில்
உன்னிடம் அம்மாவைவிட
நான்தான் அதிகம் பேசியிருக்கிறேன்
தெரியுமா?
உன் கடைசி வார்த்தை, அந்த பேச்சு
என் மரணத்தின் விளிம்பிலும்
எனக்கு ஒலிக்கும்.
எனக்கு, தெரியவில்லை
உன் இழப்பை எப்படி மறப்பதென்று?
*******************************************
என் தம்பி மருத்துவன்
என்று தம்பட்டம் அடித்தேனே நான்
இன்று என்ன செய்ய?
நான் அங்ஙனம் செய்தது தவறா?
**********************************************
உலகம் போற்ற வளர்ந்திருப்பாய்,
யார் கண்டது
தீராத நோய்க்கும் புதியதொரு
மருந்தையும் கண்டு பிடித்திருப்பாய்
என்ன செய்ய?
உன் இழப்பு
மருத்துவ உலகிற்கே பேரிழப்பு.
**************************************
பீநிக்ஸ்சை போல்
மீன்டும் உயிர் பெற மாட்டாயா
என, என் மனம் கிடந்து
வெம்புகிறது.
*****************************************
இன்னும் கனவாகத்தான்
தெரிகிறது உன் இழப்பு
உறக்கம் களைந்து விழித்து விட
மாட்டோமா என நினைக்கிறேன்.
************************************************
உன் இழப்பால்
துடிக்கும் என் மன வேதனை
என்னால் உணர முடிகிறது.
ஆனால், நம் அம்மாவை
நினைக்கும் போது என் வேதனை
ஓர் கடுகளவுதான்.
***************************************************
முத்துநகர்
உன்னைபோன்று ஓர் மாணிக்கத்தை தரும் என
யாரும் நினைக்கவில்லை.

12/11/2008, கரைந்த கண்களோடு, கனத்த இதயத்துடன்




No comments: