வானமே வெறிச்சோடி நட்சித்திரங்களற்று இருந்தது.
காரணம் என்னவென்று நிலவிடம் கேட்டேன். அவை எல்லாம்,
வானிறங்கி, உன் வீடு தேடி
உன் பிறந்தநாளுக்கு, உன்னை வாழ்த்த
வந்திருப்பதாக சொன்னது.
-- 2021
நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வருடங்களுக்கு முன் எழுதிய, இன்னும் எழுதி கொண்டிருக்கும் கவிதைகளை, படித்தவைகளை, என் எண்ணங்களை, எனக்கு பிடித்த மேற்கோள்களை இங்கு பதிவு செய்து உள்ளேன். படித்து விட்டு தங்களுடைய மேலான விமர்சனங்களை பதிவு செய்யவும்.
பள்ளி, கல்லூரியில் நமக்கு பாடங்களை எடுத்த ஆசிரியர்கள் ஒரு வகை. அனுதினமும் நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு தினம் தினம், ஒவ்வொரு நிமிடமும் பல பாடங்களை சொல்லித் தருகிறார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஏன் சில நேரங்களில் நம் வளர்ப்பு பிராணி கூட நமக்கு வாழ்க்கையின் அர்த்தமிகுந்த சில பாடங்களை சொல்லித் தரும். சில நேரங்களில் நம் நண்பர்கள் நமக்கு நம் வாழ்க்கையின் சில புரியாத விளக்கங்களையும், அர்த்தங்களையும் நமக்கு பாடமாக சொல்லித் தருவார்கள். நம்மைப் பெற்ற தாய் நமக்கு முதல் ஆசிரியர். நாம் கற்றுக் கொண்டது அனைத்துமே முதன் முதலில் தாயிடமிருந்து தான் இருக்கும். எனவே எல்லோருக்கும் பொதுவாகவே அம்மா தான் முதல் ஆசிரியர். பிறகு அப்பா. அம்மா- அப்பா இந்த இரண்டு பேருக்கு அப்பால் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது சிறந்த நண்பனாக இருக்கக்கூடும். சில பேருக்கு ஒரு தம்பி நல்ல ஆசிரியராக இருப்பான், சில பேருக்கு ஒரு அண்ணன் நல்ல ஆசிரியராக இருப்பான். இவை இரண்டுமே வாய்க்க பெறாதவர்களுக்கு ஒரு தோழியோ அல்லது ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு நண்பனோ ஒரு நல்ல ஆசிரியராக இருப்பார்கள். ஒரு சின்ன எறும்பு கூட நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தரும். ஒரு காகம் கூட சில நேரங்களில் நமக்கு வாழ்க்கையின் மகத்துவமான சில பாடங்களை கற்றுத் தரும். பள்ளி கல்லூரி படிப்பை தாண்டி நமக்கு நிறைய ஆசிரியர்கள் உண்டு. புத்தகம் படிப்பவர்கள் என்றால் நாம் படிக்கும் புத்தகத்தின் வாயிலாக நமக்கு நிறைய நிறைய ஆசிரியர்கள் கிடைப்பார்கள். நமக்கு புத்தகத்தின் வாயிலாக நம் மனதுக்குள் ஊடுருவி நம்மை வழி நடத்துவார்கள். அவர்களுடைய எழுத்து நம் மனதில் ஊறி செயலாக மாறும். நல்ல புத்தகங்கள் நல்ல ஆசிரியர்கள். உலகில் ஆசான்கள் ஏராளம் ஏராளம் கற்றுக்கொள்ள தான் நமக்கு விருப்பமும், உறுதியும் வேண்டும். அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🤝
-05/09/22